ஏற்றம், இறக்கமாய் பாதாள சாக்கடை மூடிகள்: சிரமத்துக்குள்ளாகும் புதுப்பேட்டை வாகன ஓட்டிகள்

By ம.மகாராஜன்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் இருந்து டேம்ஸ் சாலை மற்றும் ஆதித்தனார் சாலை வழியாக எழும்பூர் ரயில் நிலையம், புதுப்பேட்டை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கிச் செல்லும் முக்கிய வழித்தடத்தில் லேங்ஸ் கார்டன் சாலை அமைந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை கூவத்தையொட்டி அமைந்திருக்கும் இந்த சாலையானது சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எளிதாக சென்றடையும் வகையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் விதமாகவும், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றடையும் வகையில் காந்தி இர்வின் சாலையுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களை இணைப்பதால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். மேலும் இச்சாலையுடன் பாந்தியன் சாலையும் இணைக்கப்பட்டு உள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த லேங்ஸ் கார்டன் சாலையில் மொத்தமாக 25-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை மூடிகள் பள்ளம்போல உள்வாங்கிய நிலையில் காணப்படுகின்றன. மேலும் சில மேடுபோல உயர்ந்த நிலையிலும் இருக்கின்றன. இதனால் அவற்றின் மீது ஏறி செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது.

பாதாள சாக்கடை பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் ஆகியவை முடிவடையும்போது சாலையின் மட்டம் ஒரே சீராக இருக்கும் வகையில், பாதாள சாக்கடை மூடிகளையும் அதே மட்டத்துக்கு அமைக்க வேண்டும்.இதற்கிடையே வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால், மழைநீர் தேங்கும் நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பதே தெரியாது. இரவுநேரங்களில் இவை ஆபத்தானவையாக உள்ளன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, முன்னால் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்லும்போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு பள்ளம் வருவதே தெரியாது. இதனால் திடீரென பள்ளத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றனர்.

இதுதொடர்பாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் பொறியாளர்கள் கூறும்போது, “லேங்ஸ் கார்டன் சாலை எந்நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். ஏராளமான வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. இதனால் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகளை காலை நேரங்களில் சீரமைக்க முடிவதில்லை. அதேபோல வடகிழக்கு பருவமழை காரணமாக இரவு நேரங்களில் பாதாள சாக்கடைகளை சீர் செய்தாலும் மழையால் அவை பாதிக்கப்படும் சூழல் இருக்கிறது. இதையொட்டி சரியான திட்டமிடலுடன் இந்த பாதாள சாக்கடைகளின் மூடிகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE