முழுக் கொள்ளளவை எட்டியது மணிமுக்தா அணை - 17 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை நிரம்பியதால் நேற்று முதல் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றான மணிமுக்தா அணை 36 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் நேற்று முன்தினம் நிலவரப்படி 29 அடி நீர்மட்டம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் சங்கராபுரம் மற்றும் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, அணைக்கு விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக 5 அடி வரை உயர்ந்து, 34 அடியை எட்டியது. அணையில் 590 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு அளவு தேக்கி வைக்க முடியும். தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கக் கூடும் என்பதால், பொதுப் பணித்துறையினர் அணையின் பாதுகாப்பு கருதி 6 மதகுகள் வழியாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை நேற்று காலை முதல் வெளியேற்றி வருகின்றனர்.

தொடர்ந்து மழை அதிகரித்தால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் மணிமுக்தா ஆற்றின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த 17 கிராம மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதால் பல்ல கச்சேரி, கொங்காரயப் பாளையம், கூத்தக்குடி ஆகிய அணைகளும் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE