சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 102.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது.
முன்னதாக, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தனர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர். ஆனால், சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் அவரது மறைவு அக்கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா" - சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா (N.Sankaraiah) கோவில்பட்டியில் பிறந்தவர் (1922). தூத்துக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பாரதியார் கவிதைகள் இவருக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கின. புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார்.
* பள்ளிக் கல்வி முடிந்த பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் சேர்ந்தார். அங்கு பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மன்றத்துக்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்துவந்து பேச வைத்தார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றார்.
* ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதானார். கல்லூரிப் படிப்பும் முடிவுக்கு வந்தது. மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசையும் நிறைவேறவில்லை.
* சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உள் ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலையாகி வெளியே வந்த பிறகு, பொதுவாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார். நேதாஜி 1939-ல் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நேதாஜியை உரையாட வைத்தார்.
* ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். போலீஸாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை, சிறைத் தண்டனை என போராட்ட வாழ்க்கை நடத்தினார்.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1938-ல் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் ‘சென்னை மாணவர் சங்கம்’ என அமைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு, அதன் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* தொழிலாளர் நலனுக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதோடு களப்பணிகளிலும் துடிப்புடன் ஈடுபட்டார். பல்வேறு இதழ்களில் தனது கருத்துகளைக் கட்டுரைகளாக எழுதிவந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவர். ‘ஜனசக்தி’ இதழில் 3 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
* 1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். சட்டப்பேரவையில் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான உரைகளை ஆற்றியுள்ளார்,
* எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார், கதராடையே அணிந்து வருபவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, அவற்றில் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்ற பின்னரும்கூட, கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார்.
* 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மாணவராக, கட்சித்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, விவசாய சங்க மாநில, அகில இந்தியத் தலைவராக பல சேவைகளையாற்றி வருபவரும், சுதந்திரப் போராட்ட வீரர், ‘உழைக்கும் மக்களின் தோழர்’ எனப் போற்றப்படும் என்.சங்கரய்யா இன்று (15.11.2023) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago