கடலூர், விழுப்புரத்தில் தொடர்ந்து சீரான மழைப் பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By செய்திப்பிரிவு

கடலூர் / விழுப்புரம்: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை தொடர் மழை நீடித்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலூர் மற்றும் காவிரி டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

மேலும் நகர, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடலூர் தாழங் குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மீனவர்கள் நேற்று படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர். கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை கனமழை பெய்தது.

நேற்று மாலை வரை தொடர்மழை நீடித்தது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கடலூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க் கால்களிலும் மழை நீர் அதிக அளவில் செல்கிறது.

நேற்றைய மழையளவு: கடலூரில் 123.6 மி.மீ, சிதம்பரத்தில் 102 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 119.5 மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 98 மி.மீ, புவனகிரியில் 87 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 85.3 மி.மீ, லால்பேட்டையில் 80 மி.மீ, வேப்பூரில் 70 மி.மீ, பண்ருட்டியில் 57 மி.மீ, குறிஞ்சிப்பாடியில் 56 மி.மீ, விருத்தாசலத்தில் 42 மி.மீ, லக்கூரில் 26.3 மி.மீ, தொழுதூரில் 15 மி.மீ மழை பெய்துள்ளது.

விழுப்புரத்தில் மிதமான மழை: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி தொடங்கி விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று மாலை வரை மிதமான மழை நீடித்தது. தொடர்ந்து மழைப்பொழிவு காணப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந் தது. விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

தொடர் மழையால் மரக்காணம் பகுதியிலுள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் பாதிப்புக்குள்ளாயினர். விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு: மரக்காணம் 80 மி.மீ., வானூர் 66, முண்டி யம்பாக்கம் 65.50, திண்டிவனம் 61, செஞ்சி 24, விழுப்புரம் 16 மி.மீ.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE