டெண்டர் பிரச்சினையால் காலி கோணிப்பைகள் தேக்கம்: நியாயவிலைக் கடைகளில் இடப்பற்றாக்குறை

By கி.கணேஷ்

சென்னை: டெண்டர் பிரச்சினையால் நியாயவிலைக் கடைகளில் லட்சக்கணக்கில் காலி கோணிப்பைகள் தேங்கிஉள்ளன. கடைகளில் கோணிப்பைகள் இருப்பதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் 2.24 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34,793 நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நியாயவிலைக்கடைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் நியாயவிலைக்கடைகளில் காலி கோணிப்பைகளின் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.கடைகளில் அரிசி, பருப்புஆகியவை சணல் கோணிப்பைகளிலும், சர்க்கரை, கோதுமை ஆகியவை பாலிதீன் பைகளிலும் வருகின்றன. இவற்றை கடை விற்பனையாளர்கள் வெளியில் விற்க முடியாது. அவர்கள் அதனை கட்டி கடைக்குள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதன்பின், இந்த சணல் கோணிப்பைகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை சாக்கு வியாபாரிகளுக்கு இ-டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படும். ஆனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக டெண்டர் விடப்படாமல் கோணிப்பைகள் கடைகளில் தேங்கியுள்ளன. இதனால், கடைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொருட்களை இறக்கிவைக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

எலி தொல்லையால் சேதம்: இதுகுறித்து கடை விற்பனையாளர்கள் கூறும்போது,‘‘ பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் இறக்கிவைக்கவே இடம் பற்றாக்குறையாக இருக்கிறது. அந்த இடத்தில் கோணிப்பைகளை வைக்கும் போது, பொருட்களை இறக்கி வைக்க முடிவதில்லை. எங்களுக்கு விலைப்பட்டியல் (இன்வாய்ஸ்) தரும்போது ஒரு கோணிக்கு ரூ.30 விலை நிர்ணயிப்பார்கள். அதை விட கூடுதலாக ஒப்பந்ததாரர்கள் எடுத்தால்தான் அரசால் வழங்க முடியும். தற்போது விலை குறைவுபிரச்சினையால் டெண்டர் விடமுடியாமல் உள்ளது. எலித்தொல்லை இருப்பதால், கோணிப்பைகள் சேதமடைந்தால் அவற்றுக்கான தொகையை நாங்கள்தான் செலுத்த வேண்டியுள்ளது. பொங்கலுக்கு பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டால் பொருட்களை இறக்கி வைக்க இடம் தேவை.எனவே அதற்கு முன் கோணிப்பைகளை டெண்டர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இ-டெண்டரில் குறைந்த தொகை: இதுகுறித்து கூட்டுறவுத்துறை தரப்பில் கேட்ட போது,‘‘கோணிப்பை வியாபாரிகள் இ-டெண்டரில் குறைந்த தொகையை குறிப்பிட்டுள்ளதால், ஏலம் விடப்படவில்லை. விரைவில் ஏலம் விடப்படும். இதற்கிடையில், அரசு நெல் கொள்முதலை தொடங்கினால், இந்த கோணிப்பைகள் அதற்காக பயன்படுத்தப்பட்டுவிடும். எனவே தேக்கம் இருக்காது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE