கனமழை முன்னெச்சரிக்கை - சென்னையில் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணிவரை 4.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 7.29 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.15) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழையால் ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 மணி நேரத்தில் மழை: இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE