“தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கு ரூ.600 கோடி... கருணை இல்லா திமுக அரசு” - ஆர்.பி.உதயகுமார்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: “தீபாவளியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனையை இலக்காக நிர்ணயித்த கருணை இல்லாத அரசு” என்று திமுகவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகம் முழுவதும் 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 100 சதவீதம் பூத் கமிட்டி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக்கிணங்க நியமிக்கப்பட்டு வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

முதல்வர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அனைத்து மத திருவிழாக்களிலும் அவர் வாழ்த்து கூற வேண்டும். தமிழக முதல்வர், தீபாவளிக்கு ஏன் வாழ்த்து கூறவில்லை? இதைக் கேட்டால் மழுப்பலான பதிலை ஸ்டாலின் கூறுவார். தீபாவளி பண்டிகை என்றாலே கடவுளுடைய அருளாசி, தலைவர்களுடைய வாழ்த்துகள் என இதைத்தான் மக்கள் விரும்புவார்கள்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் மதுபானம் ரூ.431 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு கருணையே இல்லாத திமுக அரசு அதனை ரூ.600 கோடி இலக்காக நிர்ணயித்துள்ளது. மக்கள் பாடுபட்டு உழைத்த பணத்திலேயே புத்தாடை கிடைத்தது. பாடுபட்டு உழைத்த சேமித்த பணத்திலே வெடி கிடைத்தது. பலகாரம் கிடைத்தது. ஆனால் முதலமைச்சர் வாழ்த்து மக்களுக்கு கிடைக்க வில்லையே?

ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் தீபாவளிக்கு ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார். வடநாட்டில் ராமர் வனவாசம் சென்று நாடு திரும்பிய நாளே தீபாவளி என்ன சொல்லுகிறார்கள். தென்னாட்டில் கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரனை அழித்த நாளாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த பண்டிகையை முதலமைச்சர் சீர்குலைக்கலாமா? இன்னும் சொல்லப்போனால் அந்த நம்பிக்கையை சிதைக்கின்ற வகையிலே வாழ்த்து கூறாமல் மவுனம் காப்பது எந்த வகையில் நியாயம்?” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE