தியாகி சங்கரய்யாவுக்கு உடல்நலக்குறைவு - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் அவருடன் இருந்து சிகிச்சைகளை கவனித்து வருகிறார். அவருடைய உடல்நலம் தேறி மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில், அவரை நேரில் சென்று பார்க்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கேட்டுகொண்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா கோவில்பட்டியில் பிறந்தவர் (1922). தூத்துக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பாரதியார் கவிதைகள் இவருக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கின. புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். பள்ளிக் கல்வி முடிந்த பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் சேர்ந்தார். அங்கு பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மன்றத்துக்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்துவந்து பேச வைத்தார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றார்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதானார். கல்லூரிப் படிப்பும் முடிவுக்கு வந்தது. மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசையும் நிறைவேறவில்லை. சிறையில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். விடுதலையாகி வெளியே வந்த பிறகு, பொதுவாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார். நேதாஜி 1939-ல் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நேதாஜியை உரையாட வைத்தார்.

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். போலீஸாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை, சிறைத் தண்டனை என போராட்ட வாழ்க்கை நடத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1938-ல் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் ‘சென்னை மாணவர் சங்கம்’ என அமைத்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு, அதன் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். சட்டப்பேரவையில் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான உரைகளை ஆற்றியுள்ளார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர், கதராடையே அணிந்து வருபவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, அவற்றில் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்ற பின்னரும்கூட, கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்துவந்தவருக்கு தமிழக அரசு சமீபத்தில் தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE