அரூரில் கொசு உற்பத்தி மையமாக மாறிய சிறுவர் பூங்கா - நோய் பரவும் அபாயம்

By எஸ்.செந்தில்

அரூர்: அரூர் பேரூராட்சியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிறுவர் பூங்காவில் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி மையமாகி வருகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் கழிவுநீர் தேங்காமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் கோவிந்த சாமி நகர், மேட்டுப்பட்டி பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.42 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளன. இதில் குழந்தைகள் விளையாடுவதற்குத் தேவையான உபகரணங்கள், நடைபயிற்சி செல்வதற்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேவேளையில் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையான கால்வாய் வசதி இல்லாததால் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் அருகில் உள்ள சிறுவர் பூங்காவில் தேங்கி நிற்கிறது. இதனால் சிறுவர் பூங்கா முழுவதும் கழிவுநீர் தேங்கி, துர் நாற்றம் வீசி வருகிறது. மேலும் நடைபயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள தளங்களிலும் முழுவதுமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

இதுபோல, மற்றொரு பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் விடப்பட்டுள்ளது. ஆனால், கழிவு நீர் கால்வாய் பணி முழுவதுமாக முடியாமல் பாதியில் நிற்கிறது. இதனால், கழிவு நீர் முழுவதும் கடத்தூர் பிரதான சாலையில் தேங்கி வருகிறது. இதனால் சாலையில் பயணிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அரூர் பேரூராட்சி நிர்வாகம் முறையாக திட்டமிட்டு கழிவுநீர் கால்வாய்களை அமைத்து கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜய சங்கர்(பொறுப்பு) கூறும்போது, சிறுவர் பூங்கா பணி முடிவு பெறும் நிலையில் இருந்து வருகிறது. சிறுவர் பூங்காவில் கழிவு நீர் தேங்காமல் தடுத்து கழிவுகளை அகற்றி பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், நெடுஞ்சாலை துறையினர் கால்வாய் அமைத்து முடித்ததும் அத்துடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் இணைக்கப்படும். அதன் பின்னர் கழிவுநீர் தேங்காது. ஆனால், நெடுஞ்சாலை துறை கால்வாய் அமைப்பதில் கால தாமதமாகிறது. தற்காலிகமாக சாலையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE