பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த இருவருக்கு அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: "தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து வேறு எங்கும், பட்டாசுகள் வெடித்து காயம் ஏற்பட்ட நிலையில், யாரும் அனுமதிக்கப்படவில்லை", என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் 750 படுக்கை அமைப்புகளுடன் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று இரவு முதல் இன்று காலை வரை, தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து வேறு எங்கும், பட்டாசுகள் வெடித்து காயம் ஏற்பட்ட நிலையில், எங்கேயும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தனியார் மருத்துவமனைகளிலும் விவரங்கள் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆவடியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் பட்டாசு வெடித்து சிறிய காயங்களுடன், குறிப்பாக இரண்டு சதவீத தீக்காயம் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த இருவருக்கும் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இருவருமே நலமாக உள்ளனர். அந்தவகையில், இதுவரை விபத்துகள் எதுவுமின்றி, பொதுமக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE