விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு: சென்னை காவல்துறை

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை, 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. தீபாவளி பண்டிகை தினமான இன்று, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியிருந்தது.

மேலும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல்ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.

பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக் கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது.

மேலும், விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க சிறப்பு தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் இரண்டு காவலர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை, அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசுகள் வெடித்ததாக, இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தல், 125 டெசிபல் அளவுக்கு மேல்ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தது, அனுமதி இல்லாத இடங்களில் பட்டாசுகள் வெடித்தது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த தனிப்படை போலீஸார், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE