`பீக் ஹவர்' மின்கட்டண குறைப்பு அரசாணையை ஏற்கவில்லை; டிச. 4-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கோவை: பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்புதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர், திட்டமிட்டபடி டிச. 4-ம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை `பீக் ஹவர்' மின் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தொழில்முனைவோர், புதிய நடைமுறையை முற்றிலும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

சிறு, குறுந் தொழிற்சாலைகளுக்கான நிலைக் கட்டணம் 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும். பீக் ஹவர் மின்கட்டணத்தை எம்எஸ்எம்இ தொழில் துறையினருக்கு முற்றிலும் நீக்க வேண்டும்.

மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திக்கான நெட்வொர்க் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்யவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வைகைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் எம்எஸ்எம்இ தொழில்முனைவோர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

கடந்த செப். 25-ம் தேதி அமைச்சர்கள் அன்பரசன், ராஜா உள்ளிட்டோர் தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கைகள், முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து, செப். 29-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கப்படாது, சூரியஒளி ஆற்றல்மின் உற்பத்திக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்ததைதான் தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளனர். இதை தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு ஏற்கவில்லை. ஏற்கெனவே அறிவித்தப்படி டிச. 4-ம் தேதிதமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் பங்கேற்கும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும். மேலும்,எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் இணைந்து போராட்டங்களை நடத்துவோம்

தற்போது உள்ள நெருக்கடி நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை முற்றிலும் அழிந்துவிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE