தடையை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க போலீஸ் குழுக்கள் அமைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி,2 மணி நேரத்துக்கு மேல் விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பட்டாசுகள், ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை நகரில் ஆங்காங்கே ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விதிகளை மீறி பட்டாசுகளை வெடிப்பதைக் கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பட்டாசுகளை வெடிப்பதற்குச் சென்னை மாநகர போலீஸார் பல்வேறுகட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அந்த வகையில், காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். தடையைமீறி பட்டாசுகளை வெடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

எனவே, சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீஸார் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் வலம் வந்து கண்காணிக்கும். பொதுமக்கள் யாராவது குறித்த நேரத்துக்குப் பிறகு பட்டாசுகளை வெடித்து இடையூறு ஏற்படுத்துவதாக காவல் துறைக்கு புகார் வந்தால், அந்த குழு சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கும்.

அதுமட்டுமில்லாமல், பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், திரையரங்கம், கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களிலும் அதிகளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிபண்டிகையையொட்டி, டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மது விற்பனைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,நேற்று இரவே பெரும்பாலானடாஸ்மாக் கடைகளில் கூட்டம்அலை மோதியது. தீபாவளிபண்டிகையான இன்றும் மதுக்கடைகளில் அதிகமானோர் கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க அங்கும் அதிகளவில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE