முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

By என்.கணேஷ்ராஜ்

தேனி: வைகைஅணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளவை நெருங்கியுள்ளதால் அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்பாசனத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையினால் கடந்த சில வாரங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, பாம்பனாறு உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைகைஅணையின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து, கடந்த 8-ம் தேதி 69 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்துக்காக விநாடிக்கு 900கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துக் கொண்டேசென்றது. இதனால் நீர்மட்டம் 70.51அடியாக (மொத்த உயரம் 71அடி) உயர்ந்தது. நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 319 அடியாக இருந்தது. நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கியதால் அணைக்கு வரும் ஆயிரத்து 319 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டது. இதில் 700 கனஅடி நீர் பாசன வாய்க்கால் வழியாகவும், 619 கனஅடிநீர் ஆற்றின் வழியாகவும் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மாலை 4 மணிக்கு நீர்வரத்து ஆயிரத்து 50 அடியாக குறைந்தது. இந்த நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. அணை முழுக் கொள்ளவை நெருங்கியுள்ளதால், வரும் நீர் முழுவதையும் தொடர்ந்து வெளியேற்ற நீர்பாசனத் துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆகவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE