சென்னையில் ‘வழக்கமாக’ இருந்த ஆம்னி பேருந்து கட்டணம் - ஆனால், திங்கள்கிழமை ‘ரிட்டர்ன்’?

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, பெரும்பாலானோர் வியாழன், வெள்ளிக்கிழமைகளிலேயே பயணம் மேற்கொண்டதால் இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து வெளியூர் செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு என்பது குறைவாகவே இருந்து. குறிப்பாக, ஆம்னி பேருந்துக் கட்டணம் வழக்கமானதாகவே இருந்தது. ஆனால், திங்கள்கிழமை வெளியூர்களில் இருந்து சென்னைக்குத் திரும்புவதற்கான ஆம்னி பேருந்து முன்பதிவுக் கட்டணங்கள் இரு மடங்குக்கு மேலாக இருப்பதையும் கவனிக்க முடிகிறது.

பொதுவாகவே தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சமயங்களில் சென்னையில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் என்பது விண்ணை முட்டும். சென்னையில் வெளியூர்களுக்கு செல்ல இரண்டாயிரம், மூன்றாயிரம் என கட்டணங்கள் வசூலிக்கப்படுவதும், அது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதும் வாடிக்கையான நிகழ்வாகவே இருந்துவருகிறது. இதில் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்படுவது என அரசு சில நடவடிக்கைகளை எடுக்கும்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறும்போது, “நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்பேரில் ஆம்னி பேருந்துக்கு நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து கூடுதலாக 5 சதவீதம் கட்டணம் குறைப்பு செய்து பேருந்துகளை இயக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், விடுமுறை, விழா நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணம் பெரும்பொருளாதார சுமையாக இருப்பதாக வேதனை தெரிவித்த மக்கள், கட்டணத்தை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பான செய்தி > பண்டிகை நாட்களில் பொதுமக்களுக்கு சுமையாகும் ஆம்னி பேருந்து கட்டணம்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தனியார் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.3,200, நெல்லைக்கு ரூ.3,400, கோவைக்கு ரூ.3,999 என மக்களை கசக்கி பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. கடந்த மாத தொடர் விடுமுறையின்போது, மொத்தம் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றில் 2,092 பேருந்துகளுக்கு மட்டுமே ரூ.37 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை அரசு இனியும் அனுமதிக்க கூடாது. உயர் நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொண்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

கடந்த இரு தினங்களில்... - இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் வெள்ளிக்கிழமை புறப்பட்டனர். இதனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 634 சிறப்பு பேருந்துகள் என நேற்று முன்தினம் மொத்தம் 2,734 பேருந்துகள் இயக்கப்பட்டு, சென்னையில் இருந்து 1.36 லட்சம் பேர் பயணித்தனர். சென்னையில் இருந்து நேற்று 1,895 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை மக்கள் எளிதில் சென்றடையும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டிருந்தது. மாநகர பேருந்துகள் 24 மணி நேரமும் இயங்கின.

தெற்கு ரயில்வே சார்பில் ‘வந்தே பாரத்’ உட்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இடம்பிடித்து பயணித்தனர். ஆம்னி பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலானோர் முன்பதிவுசெய்து பயணித்தனர். பேருந்து நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு பெறுவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் ரயில்களில் 2 லட்சம் பேர், அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1.20 லட்சம் பேர் சென்றுள்ளனர். இதுதவிர, கார், வேன் போன்ற சொந்தவாகனங்களிலும் பலர் சென்றுள்ளனர். அந்த வகையில், சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட 2,940 ஆம்னி பேருந்துகளில் 1,17,600 பயணிகள் பயணம் செய்ததாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை தீபாவளி பண்டிகையையொட்டி இன்று இரவு பயணம் செய்ய பலரும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். என்றாலும் பெரும்பாலானோர் நேற்றே பயணம் மேற்கொண்டதால் இன்று சென்னையில் இருந்து வெளியூர் செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு என்பது குறைவாகவே உள்ளது. இதனால் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைந்த சாதாரண நாட்களில் வசூலிக்கப்படுவது போல் உள்ளது.

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று 450 ரூபாய் டிக்கெட் கட்டணமாக சில பேருந்துகளில் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் 1000 ரூபாய்க்குள் தான் டிக்கெட் கட்டணம் உள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் 500 ரூபாயில் இருந்தே தொடங்கும் டிக்கெட் கட்டணம் பெரும்பாலும் 600 முதல் 700 ரூபாய் வரை என்ற அளவிலேயே உள்ளது. இதில் சில பேருந்துகளில் முன்பதிவுகள் இல்லாமல் காலியாக உள்ளது. இதுதவிர திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, சேலம் என பல வெளியூர்களுக்கு ஊர்களுக்கு இன்று டிக்கெட் கட்டணம் மிக குறைவாகவே உள்ளது.

ஆனால், அதுவே மறுமார்க்கத்தில் வரும் திங்கள்கிழமை, அதாவது தீபாவளிக்கு மறுநாளுக்கான டிக்கெட் கட்டணம் என்பது குறைந்தபட்சம் இரு மடங்காக உச்சம் தொட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 2000 ரூபாயை தாண்டி உள்ளது. ரூ.1500-ல் தொடங்கி ரூ.3000 வரை ஆம்னி பேருந்துகளில் அன்றைய தினம் கட்டணமாக உள்ளன. பெரும்பாலும் 2000 ரூபாய் என்ற அளவில் பல ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதேபோல் கோவையில் இருந்து சென்னை வரும் பேருந்துகளின் கட்டணம் இதேபோல் 2000 ரூபாய் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE