பரமத்தி வேலூரில் 2,500 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: மாவட்ட எஸ்.பி நேரில் விசாரணை

By கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே 2,500 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் விவரம்: பரமத்தி வேலூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி இளங்கோமணி. இவர் அப்பகுதியில் உள்ள தனது 5 ஏக்கர் விளைநிலத்தில் வாழை மரம் நடவு செய்துள்ளார். மொத்தம் 2,500 மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. அனைத்து மரத்திலும் காய் பிடிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை இளங்கோமணி அவரது விவசாய தோட்டத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அனைத்து வாழை மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளங்கோமணி, இந்தச் சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் யார் என்பது தெரியவில்லை. இதனிடையே, மாவட்ட போலீஸ் எஸ்.பி எஸ்.ராஜேஸ்கண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, எஸ்.பி உத்திரவின்பேரில் ஜேடர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வாழை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றர்.

கடந்த மார்ச் மாதம் ஜேடர்பாளையம் அருகே திருமணமான இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் இருமுறை ஆயிரக்கணக்கான வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மேலும், வாகன எரிப்பு, வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் 11 பேரை ஜேடர்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்தப் பின்னணியில், நேற்று இரவு மீண்டும் 2,500 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE