சென்னை: அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதிரான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிக்கிறார். வழக்கு நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, "வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றியது தான் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதற்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு மாற்றும்படி நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. அவ்வாறு மாற்றுவது தொடர்பாக தங்களிடம் கருத்தை கூட கேட்காத நிலையில், வழக்கை மாற்றியதற்கு தாம் எப்படி பொறுப்பேற்பது?” என வாதிட்டார்.
மேலும், “வேலூர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிந்து நான்கு நாட்களில் தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நீதிபதியால் இந்த வழக்கு 9 மாதங்கள் விசாரிக்கப்பட்டது. பொன்முடியின் அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பின்னர் தான் வழக்கின் விசாரணை விழுப்புரத்திலிருந்து, வேலூருக்கு மாற்றப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த கடிதத்தை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது தொடர்பாக நிர்வாக ரீதியாக தன்னால் உத்தரவு பிறபிக்க முடியாது. மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாக கூறினார்.
» ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர் நவ.12-ல் ரிலீஸ்
» தி.மலை கோயில் ராஜகோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்ட உயர் நீதிமன்றம் தடை
தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “சட்டசபையில் பொன்முடியின் ஆக்கபூர்வமான செயல்பாடு மற்றும் அரசியல் திறன் காரணமாக திமுக ஆட்சியில் 1996-2001 மற்றும் 2006-2011 என இரண்டு முறை அமைச்சராக இருந்தவருக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் ஊடகங்களின் வெளிச்சம் அதிகமாக உள்ளது. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததால் தம்மை குற்றவாளியாக சித்தரிக்கின்றனர். வேலூர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.பசந்த் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தனது தரப்பை வாதத்தை விரிவாக வைப்பதற்கு அவகாசம் வேண்டும் எனக் கோரி டிசம்பர் 27-ம் தேதி வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ‘எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீண்ட காலத்துக்கு ஒத்திவைக்க முடியாது. அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நிலைப்பாடு என்ன?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான், வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அதற்குள் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விட்டதாகவும் கூறினார். இருப்பினும், லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago