நெல்லை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுமா? - தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற் றுள்ளது.8 பெட்டிகளுடன் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் ரயில் தென் மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. செவ்வாய்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணி 50 நிமிடங்களில் அதாவது மதியம் 1.50 -க்கு இந்த ரயில் சென்னை சென்றடைகிறது. பின்னர் மீண்டும் பிற்பகல் 2.50 க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் திருநெல்வேலி பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 589 கி.மீ. தூரமுள்ள திருநெல்வேலி- பெங்களூரு வழித்தடத்தில் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை உள்ளது. மேலும் திருநெல்வேலி- திண்டுக்கல் மற்றும் சேலம்- பெங்களூரு இடையே இரட்டை அகல ரயில் பாதை உள்ளது. திண்டுக்கல் சேலம் இடையே 159 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே ஒற்றை ரயில் பாதை உள்ளது.

இந்தநிலையில் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, டபுள் டக்கர், ஜனசதாப்தி போன்ற எந்த வித அதிவிரைவு ரயில்களும் இல்லை என்ற குறை உள்ளது. எனவே இந்தக் குறையை போக்கும் வகையில் திருநெல்வேலி- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த வழித்தடத்தில் போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனைப் போக்கும் வகையில் திருநெல்வேலி- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கினால் நல்ல வரவேற்பு கிடைக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE