மதுரை கள்ளழகர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக சென்னையைச் சேர்ந்த வி.ஆர்.வெங்கடாஜலம் நியமனம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக சென்னை ஆழ்வார்பேட்டையச் சேர்ந்த வி.ராமசாமி உடையார் மகன் வி.ஆர்.வெங்கடாஜலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நடந்த முதலாவது கூட்டத்தில், தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் தக்காராக சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த வி.ஆர்.வெங்கடாசலம், கடந்த 2010-ம் ஆண்டு முதல் கோயில் தக்காராக இருந்து வருகிறார். இதற்கிடையில், கள்ளழகர் கோயில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக 5 பேரை நியமனம் செய்து, இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன் கடந்த அக்.13-ம் தேதி உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்குள் அறங்காவலர் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கவும், உறுப்பினர்கள் பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி இன்று கள்ளழகர் கோயிலில் உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் தலைவருக்கான தேர்தல் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை தலைமை வகித்தார். கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி முன்னிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை வி.ஆர்.வெங்கடாஜலம், உத்தங்குடி வளர் நகர் அ.பாண்டியராஜன், காதக்கிணறு செந்தில் குமார், அச்சம்பத்து ரவிக்குமார், ஜெய் ஹிந்த் புரம் பி.மீனாட்சி ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

பின்னர் அறங்காவலர் குழுத் தலைவர் தேர்தல், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல உதவி ஆணையர் வளர்மதி தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், தற்போதைய கோயில் தக்காரான சென்னை ஆழ்வார்பேட்டை ராமசாமி உடையார் மகன் வி.ஆர்.வெங்கடாஜலம் அறங்காவலர் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ந்து 13 ஆண்டுகளாக கோயில் தக்காராக இருந்து, தற்போது அறங்காவலர் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பின்னர் முதலாவது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் வி.ஆர்.வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்றது. கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி முன்னிலை வகித்தார், இதில் உறுப்பினர்கள் அ.பாண்டியராஜன், செந்தில்குமார், ரவிக்குமார், பி.மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களாக நியமனத்துக்குப் பரிந்துரை செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜகோபுரம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்துவது போல் இன்னும் 6 மாதத்தில் கோயில் மூலவர் விமானம், தாயார் சன்னதி உள்ளிட்ட கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சஷ்டி, கார்த்திகை தீப திருவிழாக்களையும் சிறப்புற நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத் துறை மேலூர் சரக ஆய்வர் ஐயம் பெருமாள், கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE