தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு: ஓசூர் அருகே 50 கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் அருகே தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 50 கிராமங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் உத்தனப்பள்ளி அருகே அயர்னப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பண்டப் பள்ளியில் தென் பெண்ணை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் வடக்கு பகுதியில் கொத்த குறுக்கி, கூலியம், மண்ணங்கல், மூக்காண்டப்பள்ளி, உலகம், சூளகிரி உள்ளிட்ட கிராமங்களும், ஆற்றின் தென் பகுதியில் பண்டப் பள்ளி, பந்தாரப் பள்ளி, மெட்டரை, தொட்டமெட்டரை ஆகிய கிராமங்கள் உள்ளன.

ஆற்றின் இருகரை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது விளை பொருட்களை சூளகிரி மற்றும் ராயக்கோட்டை சந்தைக்குத் தினசரி ஆற்றைக் கடந்து எடுத்துச் செல்கின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இச்சாலை முற்றிலும் துண்டிக்கப்படும்.

இதனால், வடபகுதியில் உள்ள கிராம மக்கள் உலகத்திலிருந்து ராயக்கோட்டை வழியாக உத்தனப்பள்ளி, அளேசீபம் மற்றும் கெலமங்கலத்துக்கு 15 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். இதேபோல, மெட்டரை, அளேசீபம் உள்ளிட்ட பகுதி மக்கள் உத்தனப்பள்ளி வழியாக 20 கிமீ தூரம் சுற்றி சூளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது.

இதனால், ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக் கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்பெண்ணை நீர்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், கெலவரப் பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து நேற்று முன்தினம் ஆற்றில் விநாடிக்கு 2,270 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று நீர் திறப்பு 4,480 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து, தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பண்டப் பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆற்றின் இரு கரைப் பகுதியில் உள்ள கிராம மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் 15 முதல் 25 கி.மீ. தூரம் சுற்றி பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். இதே போல, ஆற்றின் நடுவில் உள்ள சிவன் கோயிலுக்கும் பக்தர்கள் ஆற்று நீரைக் கடந்து சென்று வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கூறியதாவது: அயர்னப்பள்ளி மற்றும் பங்கனஹள்ளி ஊராட்சிகளை இணைக்கும் சாலையின் குறுக்கே தென் பெண்ணை ஆறு செல்கிறது. ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த ஆற்றைக் கடந்து கெலமங்கலம் மற்றும் ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லுகின்றனர்.

இதேபோல, மெட்டரை, பண்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் சூளகிரி, கிருஷ்ணகிரிக்கு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது ஆற்றைக் கடக்க முடியாமல் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

இதில், ஆபத்தை அறியாமல் ஆற்றைச் சிலர் கடந்தபோது, உயிரிழப்புகளும் நடந்துள்ளன. இச்சிரமத்தை போக்கவும், 50 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE