தமிழக அரசின் சூதாட்ட தடை சட்ட பிரிவுகள் ரத்து: ஆன்லைன் ரம்மி விளையாட தடையில்லை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்றுகூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப் பிரிவுகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விளையாட்டுகளை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்தும், அதை ஒழுங்குபடுத்தும் வகையிலும் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2022 அக்.19-ம் தேதி நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆளுநர் கடந்த மார்ச் 6-ம் தேதி அந்த மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, மார்ச் 23-ம் தேதிசட்டப்பேரவையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு, அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு, சட்டத்துக்கு ஆளுநர்கடந்த ஏப்.10-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நடந்து வந்தது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர்கள் முகுல்ரோஹ்தகி, சி.ஆர்யமா சுந்தரம், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘‘இதுபோல ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம்இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆன்லைனில் ரம்மி விளையாடுவது திறமை சார்ந்த விளையாட்டு என உச்ச நீதிமன்றமே கூறிய பிறகு, அதை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது. எனவே தமிழக அரசின் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டனர்.

தமிழக அரசு தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநிலஅரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஆன்லைன் சூதாட்டவிளையாட்டுகளால் அப்பாவி மக்கள் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதனால், ஆன்லைன் சூதாட்டம் மூலமாக பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்கும் நோக்கிலேயே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது’’ என வாதிட்டனர்.

இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதிகள் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர்போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர்ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்