தமிழகத்தில் 2026 தேர்தலில் கொக்குபோல காத்திருந்து பாஜக ஆட்சியை பிடிக்கும்: அண்ணாமலை உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலில் கொக்கு போல காத்திருந்து தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

என் மண் என் மக்கள் யாத்திரை 103 தொகுதிகளை கடந்திருக்கிறது. இன்னும் 131 தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, ஜனவரி இறுதி வாரத்துக்குள் யாத்திரையை முடித்துவிட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக திட்டமிட்டு இருக்கிறோம். இதுவரை நடைபயணத்தில் 3 முக்கிய விஷயங்களை கவனித்தோம். தென் தமிழகம் தொடங்கி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி வரை நடக்கும் சமூக அநீதி. விவசாயத்தை சார்ந்த பிரச்சினைகள். நிர்வாகத்தில் அடிமட்ட அளவில் இருந்து பரவி கிடக்கும் லஞ்சம், ஊழல்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த மூன்றும்தான், யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும். கடவுள் இல்லை, கடவுளை கற்பிப்பவன் முட்டாள் என்ற வாசகங்கள் கோயிலுக்கு வெளியே வைக்கப்படுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. பெரியார் சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், ரங்கம் கோயில் அருகே உள்ள பெரியார் சிலையின் கீழ் எழுதியிருக்கும் வாசகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அந்த கருத்தை தேவாலயத்தின் முன்போ, மசூதி முன்போ வைக்க ஒத்துக்கொள்வார்களா?

பெரியாரின் கருத்துகளை கோயிலுக்கு வெளியே வைக்க வேண்டும் என்பதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தால், திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எதிராக பெரியார் சொன்ன கருத்துகளை அவர்களது கட்சி அலுவலகத்துக்கு வெளியே வைக்கவும் ஆதரவு கொடுப்பார்களா? கோயிலுக்கு வெளியே பெரியாரின் சிலை, அந்த வாசகங்கள் அகற்றப்பட வேண்டும். 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்தால் பெரியாரின் சிலை எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு மாற்றப்படும். அந்த சிலைக்கு உரிய மரியாதை பாஜக கொடுக்கும்.

97 சதவீதம் யாருடையது? தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அமைச்சர் சேகர்பாபு ஒருதலைபட்சமாக ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அறநிலையத்துறை ரூ.5,340 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை மீட்டுள்ளதாகவும், அதில் ரூ.162 கோடி இந்துத்துவா சக்திகளிடம் இருந்து (அதாவது பாஜக, இந்து முன்னணியிடம் இருந்து) மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்போது, மொத்தமாக மீட்கப்பட்டதில் 3 சதவீதம் தொகை இந்துத்துவாவிடம் இருந்து மீட்கப்பட்டது என்றால், மீதமுள்ள 97 சதவீதம் யாரிடம் இருந்து மீட்கப்பட்டது என்பதை திமுக வெளியிட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையை கலைத்தால், கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவோம். இது எங்கள் கொள்கை முடிவு. இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும் என்ற விவகாரத்தில் சிலர் கொக்கு, மீன் என்று பேசுகிறார்கள். சில அரசியல் தலைவர்களுக்கு கொக்குக்கு இருக்கக்கூடிய பொறுமை இருந்திருந்தால், அந்த கட்சியில் பிரச்சினை வந்திருக்காது. கொக்கு பொறுமையாக காத்திருந்து மீனை பிடிக்கும். அதேபோலதான் பாஜக காத்திருந்து 2026 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். எங்களுக்கான நேரம் 2026 என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்விக்காக யாரும் பணம் செலுத்த வேண்டிய நிலை வராது. இப்போது பகையாளியாக இருப்பது பாஜக மட்டும்தான். மற்றவர்கள் பங்காளிகளாகத்தான் இருக்கிறார்கள். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, ஒரு கட்சியின் முன்னாள் அமைச்சர், இன்னொரு கட்சியின் தற்போதைய அமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இண்டியா கூட்டணி வேண்டும் என்பதற்காக பிஹார் முதல்வரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலினும், கனிமொழியும் இதுவரை வாய் திறக்கவில்லை.

மனுஸ்மிருதி பற்றி 1902-ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் எழுதிய ஒரு புத்தகத்தை படித்துதான் சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். யாரும் ஏற்றுக்கொள்ளாத புத்தகத்தின் கருத்துகளை உதயநிதி படித்தார் என்றால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களில் சனாதன தர்மம் குறித்து இருக்கிறது. அதை ஏன் அவர் படிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE