புதுச்சேரி | என்ஐஏ அதிகாரிகளிடம் பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா: கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் கைது

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நடத்திய சோதனையின்போது பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா பொட்டலங்களும் சிக்கியுள்ளதால் கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடிப் பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கு வங்க பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் நேற்று சோதனையிட்டனர். அப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த பாபுவை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். பாபு தங்கியிருந்த அறையில் சோதனையிட்டபோது புதுச்சேரி உருளையன் பேட்டை போலீஸாரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்காக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அறையில் சோதனை நடத்திய புலனாய்வு பிரிவினர் அங்கு 190 கிராம் மதிப்புள்ள 2 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து பாபுவுடன் தங்கியிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த ஆரிப் ஷேக் (20), சதா மெஷிக் (30) ஆகிய இருவரை உருளையன்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

இதுபற்றி உருளையன்பேட்டை போலீஸார் கூறுகையில், "என்ஐஏ கைது செய்த பாபுவிடம் விசாரித்தபோது, தன்னுடன் அறையில் தங்கிய இரண்டு பேர் கஞ்சா வைத்திருப்பதை தெரிவித்தார். ஏற்கெனவே பாபு மீதும் போதைப்பொருள் வழக்கொன்று நிலுவையில் உள்ளது. பாபு அறையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை என்ஐஏ எங்களிடம் ஒப்படைத்தனர். அதன்படி கொல்கத்தாவைச் சேர்ந்த இருவரை கைது செய்தோம்.

விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா பயன்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் இன்று அடைத்துள்ளோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE