சென்னை: “ஆன்லைன் சூதாட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு அல்ல; அது அதிர்ஷ்டம் சார்ந்த சூதாட்டம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்து, ஆன்லைன் ரம்மி தடையை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தின் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து இயற்றப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் செல்லும், சில பிரிவுகள் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளை தடை செய்யும் சட்டப் பிரிவுகள் செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கும் உயர் நீதிமன்றம், அதேநேரத்தில் ரம்மி திறமைக்கான விளையாட்டு என்பதால், ஆன்லைன் ரம்மிக்கான தடை செல்லாது என்று அறிவித்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் மற்றும் அப்பாவிகளின் உயிருடன் தொடர்புடைய இந்த வழக்கின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. அதன் நோக்கம் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும் என்பது தான். பிற ஆன்லைன் விளையாட்டுகளை விட, ஆன்லைன் ரம்மி ஆட்டத்தை தான் லட்சக்கணக்கான இளைஞர்கள் விளையாடுகின்றனர். அதில் தான் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, கடனாளியாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், பெரிய அளவில் சமூகக் கேட்டை ஏற்படுத்தாத போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் தடை செல்லும் என்று கூறி விட்டு, ஆன்லைன் ரம்மி மீதான தடை செல்லாது; வேண்டுமானால் அந்த ஆட்டத்தை முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்திருப்பதை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆன்லைன் ரம்மி எவ்வளவு தான் முறைப்படுத்தப்பட்டாலும், அது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தவுடன் தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வீட்டில் பூச்சிகளால் அதில் விழுவதும், பெருமளவில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகிவிடும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர்கள், அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் இப்போது வரை தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்போது ஆன்லைன் ரம்மிக்கான தடை நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து என்னென்ன நடக்குமோ? என்பதை நினைக்கவே நெஞ்சம் பதைக்கிறது.
தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும் வரை சுமார் 60 பேர், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். 2021-ஆம் ஆண்டு அந்த தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் தடை செய்யப்படும் வரை 49 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலை தொடரக்கூடாது என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டது. ஆனால், ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு என்ற உயர் நீதிமன்றத்தின் தவறான நம்பிக்கையால் அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகியிருப்பது வேதனையளிக்கிறது.
ஆன்லைன் ரம்மி சாத்தானுக்கு இனியும் இளைஞர்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு அல்ல; அது அதிர்ஷ்டம் சார்ந்த சூதாட்டம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்து, ஆன்லைன் ரம்மி தடையை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 secs ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago