சேலத்தில் கனமழையால் சிவதாபுரம் பகுதி வீடுகளில் வெள்ளம் - மக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால் வெள்ளக் காடாக சிவதாபுரம் மாறியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் நேற்று முன் தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. சேலம் மாநகராட்சி 22-வது கோட்டம் சித்தர் கோயில் மெயின் ரோடு, சிவதாபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக, பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது.

சாக்கடை கால்வாய்களை சரிவர தூர்வாராததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல், சாலைகளில் சாக்கடைக் கழிவு கலந்த மழை நீரானது முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீரும், சாக்கடைக் கழிவும் கலந்து சூழ்ந்து நின்றது. இது குறித்து சிவதாபுரம் பொதுமக்கள் அதிமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மழைநீர் வெளியேறும் வழி குறித்து ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் வீடுகளை சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையரிடம் மக்கள் வாக்குவாதம் செய்தனர். ‘இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் மழை நீர் தேங்காதபடி வடிகால் அமைக்கப்படும், என மாநகராட்சி ஆணையர் உறுதி கூறினார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE