புதுக்கோட்டையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் வழங்கல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு தீருதவித் தொகையாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.

குளத்தூர் வட்டம் கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் விஷ்ணு குமார் (16). இவர், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ.3-ம் தேதி பள்ளிக்குச் சென்ற விஷ்ணு குமாரை சிலர் தாக்கியுள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த விஷ்ணு குமார், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்கு திரும்பி வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் உடையாளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை கீரனூர் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொப்பம்பட்டி கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவி வர்மன், அங்கு விஷ்ணு குமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதிராவிடர் நலத் துறை சார்பில் வழங்கப்படும் தீருதவித் தொகை ரூ.12 லட்சத்தில் இருந்து 50 சதவீத தொகையான ரூ.6 லட்சத்துக்கான காசோலையை விஷ்ணு குமாரின் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது, மீதித் தொகை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு, இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புதுக்கோட்டை விருந்தினர் மாளிகையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ரவி வர்மன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வ நாயகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE