''தமிழகத்தில் பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காது'' - பெரியார் சிலை குறித்த அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

By செய்திப்பிரிவு

சென்னை: "கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில், எத்தனை குட்டிக்கர்ணங்கள் அடித்தாலும், எத்தனை ஐடி ரெய்டுகள் நடத்தினாலும், எத்தனை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தினாலும் கிடைக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது திராவிட மண்" என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் இன்று (நவ.8) மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொன்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பாக உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர வாழும் நாடு இந்த நாடு. இதில் பெரியார் கொள்கைகளோடு, இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான், இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது.

கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில், எத்தனை குட்டிக்கர்ணங்கள் அடித்தாலும், எத்தனை ஐடி ரெய்டுகள் நடத்தினாலும், எத்தனை அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தினாலும் கிடைக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது திராவிட மண். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர்.

தமிழகத்தில் இன்னொரு கால் நூற்றாண்டுக்கு, திமுக ஆட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைப்பது குறித்து நினைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒரு சூழ்நிலை நிலவவில்லை. தமிழக முதல்வரின் அரும்பணியும், மக்கள் நலத்திட்டங்களும், ஏற்கெனவே இருக்கும் திமுகவின் வாக்கு வங்கியில் மேலும், 20 சதவீதம் கூடியிருக்கிறது. எனவே, அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தில் கையெழுத்திடுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்கமாட்டார்கள். இந்தியாவில், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் 1959-ல் உருவாக்கப்பட்ட பிறகு, எண்ணற்ற சாதனைகள் எந்த ஆட்சியிலும் செய்யப்படவில்லை. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதால், பாஜக மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண துடிக்கிறது.

ஆனால், இந்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக திமுக இருப்பதால், ஆன்மிகவாதிகளை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் இயக்கமாக திமுக இருப்பதால், பாஜகவால் தமிழகத்தில் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதால்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து என்றெல்லாம் அறைகூவல் விடுத்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE