மத்திய, மாநில திட்டங்கள் ஒருங்கிணைத்து 1 லட்சம் பேருக்கு மகப்பேறு நிதியாக ரூ.44 கோடி: அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் மற்றும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா 2.0 ஆகிய இரு திட்டங்களும் ஒருங்கிணைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளன. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்வில் இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கடந்த 2006-ல் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் முதலில் ரூ.6,000, பின்னர், 2011-12-ல் ரூ.12,000 வழங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ரூ.3,000, மாநில அரசு ரூ.15,000 என ரூ.18,000 ஆக உயர்த்தி, முதல் 2 கர்ப்பத்துக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு முதல் பெண் குழந்தைக்கு ரூ.3,000, 2-வது பெண் குழந்தைக்கு ரூ.6,000 தருகிறது. கர்ப்பமான 3, 4-வது மாதங்களில் தலா ரூ.2,000, குழந்தை பிறந்தவுடன் மற்றும் 3 மாதங்கள் கழித்து தலா ரூ.4,000, 9 மாதம் கழித்து ரூ.2,000 என்று ரூ.14,000 ரொக்கமாகவும், ரூ.4,000 மதிப்பிலான 2 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

முதல் தவணை தொகை சென்றடைவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, அதில் உள்ள குறைகள் களையப்பட்டு, திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது.இனிமேல், கர்ப்பமான 4-வது மாதம் ரூ.4,000, குழந்தை பிறந்தவுடன் ரூ.4,000, குழந்தை பிறந்து 4 மாதங்கள் கழித்து ரூ.6,000 என்று 3 தவணையில் மொத்தம் ரூ.14,000 நிதியுதவி ரொக்கமாக வழங்கப்படும்.

மத்திய அரசு தனது பங்களிப்பு தொகையை தாமதமாக வழங்கினாலும், மாநில அரசு தனது பங்கு தொகை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.44.05 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கிய 2006 முதல் இதுவரை 1.17 கோடி பேருக்கு ரூ.10,529.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் சண்முககனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

100 இடங்களில் நவ.18-ல் முதல்வர் காப்பீடு சிறப்பு முகாம்: முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 8.12 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதில் இன்னும் சேராமல் உள்ளவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 100 இடங்களில் புதிய காப்பீடு திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தமிழகத்தில் 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. காப்பீடு திட்ட அட்டை பெறாதவர்கள் இதில் கலந்து கொண்டு, அட்டையை பெறலாம். கடந்த 2006-ல் வழங்கப்பட்ட அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு, புதிய அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்