“நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்க வேண்டும்” - கட்சியினரிடம் கமல்ஹாசன் விருப்பம்

By செய்திப்பிரிவு

சென்னை: “நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும்” என பிறந்தநாள் விழாவில் கட்சியினரிடையே கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசனின் பிறந்த நாள் சென்னையில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று கட்சியினரிடையே உரையாற்றிய கமல்ஹாசன், “நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். அதை நோக்கி நகரந்துகொண்டிருக்கிறோம். அதற்கான எல்லா முனைப்பையும் மேற்கொள்ள வேண்டும். இன்னும் நிறைய வேலை இருக்கிறது. இன்னும் 100 மடங்கு வேலை காத்திருக்கிறது. அதை உங்களால் செய்ய முடியும். அதற்கான முன்னோட்டம் தான் இது.

மிக சிறப்பான சூழல் நம்மை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்தச் சூழலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என் கலையின் மூலமாக சொல்ல வேண்டியது நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அடுத்து ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ வரும்போது அது அரசியல் மேடையாக மாறும். அதில் செய்திகள் இருக்கின்றன. நீங்களும் நானும் பேசும் உரையாடல் இருக்கிறது. தேர்தல் அறிவித்தவுடன் பன்மடங்கு வேகமாக ஓட வேண்டியிருக்கும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாளை நமதே” என்றார். அவரின் இந்த பேச்சின் மூலம் ‘இந்தியன் 3’ படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் கோவையில் கமல் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான நிலையில், பிறந்தநாளில் அவரது இந்தப் பேச்சு கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE