விடிய விடிய பெய்யும் மழை, பள்ளங்களில் நிறையும் நீர்... - மதுரையில் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதி

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தினமும் மாலை நேரத்தில் தொடங்கும் இந்த மழை இடைவிடாமல் இரவு வரை அடைமழையாக பெய்கிறது. மதுரையில் தற்போது மாநகராட்சி சார்பில் பாதாளச் சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. அதனால், குடியிருப்பு பகுதிகள் மட்டுமில்லாது முக்கிய மெயின் சாலைகளிலும் மாநகராட்சி ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் பள்ளங்களை தோண்டிப் போட்டுள்ளனர்.

பணிகள் முடிந்த சாலைகளை அவர்கள் முறையாக மூடிச் செல்வதில்லை. அதனால், மழையில்லாத காலத்திலேயே கார்கள், சரக்கு வாகனங்கள் இந்த பள்ளங்களில் புதைந்துவிடுகின்றன. மழை நாட்களில் சொல்லவே வேண்டாம், சாலைகளில் தண்ணீர் நிரம்பி மேடு, பள்ளம் எது எனத்தெரியாமல் வாகன ஓட்டிகள் சருக்கியும், தடுமாறியும் கீழே விழுந்து செல்கின்றனர். அதுபோல், நிலை தடுமாறி பள்ளங்களில் வாகனங்களை விட்டு படுகாயம் அடைகின்றனர். மாநகராட்சி சாலைகளில் மழைநீர் கால்வாய்கள், வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மழை நின்றப்பிறகும் சாலைகளில் தெப்பம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

சில மணி நேரம் மழை பெய்தாலே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத பரிதாபமாநிலையில் மதுரை மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். தற்போது பருவமழை எனபதால் மாலை நேரங்களில் பெய்யும் மழையில் தினமும் பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்புகின்றனர். பாதாளச் சாக்கடை நிரம்பி கழிவு நீர் இந்த மழைநீருடன் தேங்கி நிற்கிறது. அதனால், மாணவ, மாணவிகளுக்கு சளி, காய்ச்சல், தொற்று நோய்கள் அதிகளவு ஏற்பட்டு வருகின்றது. நோய் பாதிப்பால் பள்ளிகளுக்கு அதிகளவு மாணவ, மாணவிகள் தற்போது வருவதில்லை.

இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு முதல் இன்று அதிகாலை முதலே மதுரை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியது. கனமழையாகவும் இல்லாமல், தூறலும் இல்லாமல் மிதமான மழை அடைமழையாக பெய்தது. அதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி சாலைகளில் வாகனங்களே செல்ல முடியவில்லை. நிற்காமல் அடை மழை பெய்ததால் இன்று காலையில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் புறநகர் கிராமங்களில் இருந்து 20 முதல் 30 கி.மீ., தாண்டி பஸ்களில் வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். அதுபோல், பெரும்பாலான மாணவர்களை பெற்றோர்கள்தான் இரு சக்கர வாகனங்களில் பள்ளிகளில் கொண்டு போய்விடுகிறார்கள். தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற தனியார் பள்ளிகளில் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

அதிகாலை முதலே அடைமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைப்படும் என பெற்றோர்கள் காத்திருந்தனர். ஆனால், கல்வித் துறை தரப்பிலும், மாவட்ட நிர்வாகத் தரப்பிலும் எந்த தகவலும் வராததால் மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளிகளுக்கு மழையில் நனைந்தபடியே சென்றனர். புறநகர் கிராமங்களில் இருந்து நகர் பகுதி பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்கள் பெரும்பாலானவர்கள் இன்று மழையால் பள்ளிக்கு வரவில்லை. இரு சக்கர வாகனங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ரெயின் கோட் போட்டப்படியும், குடைப்பிடித்தபடியும் பள்ளிகளுக்கு கொண்டு போய்விட்டனர்.

நேற்று இரவும், இன்று அதிகாலையும் மழை பெய்ததால் மதுரை மாவட்டத்தில் குடியிருப்புகளில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. அதனால், பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் சாப்பாடு செய்து பள்ளிக்கு அனுப்புவதிலும் சிரமம் ஏற்பட்டது. பெரும்பாலான மாணவர்கள், பள்ளிகளுக்கு நனைப்படிபடியே சென்றால் அவர்களால் வகுப்பறைகளில் ஈரத்துணியால் அமர்ந்து இருக்க முடியாமல் சிரமப்பட்டார்கள். படிப்பைத் தாண்டி மாணவர்கள் உடல் ஆரோக்கியமும், மனநலனும் முக்கியமானது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை இதுபோன்ற காலை நேர மழைகாலங்களில் சிறப்பு கவனமும், முக்கியத்துவமும் கொடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதா அல்லது பள்ளி தொடங்கும் நேரத்தை சிறிது நேரம் தள்ளி வைப்பதா என தாமதம் செய்யாமல் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இன்று காலை அடை மழை பெய்தும் மாவட்ட நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அலட்சியம் காட்டியதால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE