சென்னை: "தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும். விசைத்தறி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை உடனடியாக அழைத்துப் பேசி, போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் உயிர் நாடியான வேளாண்மை, திமுகவின் இருண்ட ஆட்சியில் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாமல் ஏற்கெனவே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நிர்வாகத் திறமையற்ற திமுக அரசின் பொம்மை முதல்வர், இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
குறிப்பாக, கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி உட்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் OE எனப்படும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களின் மறுசுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பு கடந்த ஜூலை மாதம் நூல் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தியது. ஆனால், இன்றுவரை திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனது தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, அவ்வப்போது தொழில் முனைவோர்கள் மற்றும் ஜவுளித் துறையினரை நானே நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு நிறைவேற்றி வந்ததை தொழில் முனைவோர்களும், ஜவுளித் துறையினரும், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களும் நன்கு அறிவார்கள். இதனால், வெளிநாடுகளுக்கு பல்லாயிரம் கோடி அளவில் தொடர்ந்து ஏற்றுமதி நடைபெற்றது. தொழில் முனைவோர் அதிக அளவு அந்நிய செலாவணியை நம் நாட்டுக்கு ஈட்டித் தந்தனர். இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.
திமுக அரசின் அபரிமிதமான மின்சாரக் கட்டண உயர்வு: அதிமுக ஆட்சியில் HT-க்கு 1 யூனிட் மின் கட்டணம் ரூ. 6.35 எனில், தற்போதைய திமுக ஆட்சியில் ரூ. 6.90 ஆகும். 1 கிலோ வாட் தேவைக் கட்டணம் (Demand Charges) அதிமுக ஆட்சியில் ரூ. 350. விடியா திமுக ஆட்சியில் ரூ. 562. அதேபோல், விசைத்தறி 500 யூனிட்டுக்குமேல் அதிமுக ஆட்சியில் ரூ. 6.60. திமுக ஆட்சியில் ரூ. 8.15. இதுவும் 1000 யூனிட்டுக்குமேல் ரூ. 11.25 பைசா. அதாவது, இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல், மின் கட்டணம் நூல் மில்களுக்கு HT-க்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 8. ஆனால், சிறு தொழில்களுக்கான HT-க்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 9.50.
மின் கட்டண உயர்வு தவிர, திமுக அரசு, அடிக்கடி மின் கட்டணத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கே வழங்கியது. இதனால், ஏற்கெனவே மின் கட்டண உயர்வால் தள்ளாடிக் கொண்டிருந்த தொழில் துறையும், ஜவுளித் துறையும், திமுக அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்த இரண்டாம் முறை மின் கட்டண உயர்வினால் இயங்க முடியாத நிலைக்கே சென்றுவிட்டது. எனவேதான், திமுக அரசின் கடுமையான மின் கட்டண உயர்வுக்கு தொழில் துறையும், ஜவுளித் துறையும் தங்களது கடும் எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இதுதவிர, திமுக அரசு, மத்திய அரசிடம் நூல்கள் மற்றும் ஜவுளி ரகங்களுக்கு குறைத்துள்ள இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்துவதற்கு வலியுறுத்த வேண்டும். வெளிநாடுகளைப் போல் தமிழகத்திலும் ஜவுளி உற்பத்திக்கு அதிக மானியம் வழங்க திமுக அரசை வலியுறுத்தியும், மின் கட்டணத்தை குறைக்கக் கோரியும் ஜவுளித் துறையினர் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால், விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் சங்கம் 5.11.2023 முதல் 25.11.2023 வரை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
திமுக ஆட்சியாளர்கள், கடந்த 30 மாத காலமாக தமிழகத்தையும், நாட்டு மக்களையும் பற்றி கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுவது வேதனைக்குரியது. கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் மூலம் திமுக ஆட்சியாளர்கள் கோடிகளை கொள்ளை அடித்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், திமுக அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தி வருகின்றன.
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் நிலையில், விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் 20 நாட்கள் உற்பத்தி நிறுத்த அறிவிப்பினால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பதுடன், தீபாவளியை குடும்பத்துடன் சந்தோஷமாகக் கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
எனவே, கடும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்றும், ஜவுளித் தொழிலில் தமிழகம் முன்பு எப்படி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கியதோ, அதேபோல் இப்போதும் ஜவுளித் தொழிலில் முதன்மை மாநிலமாக விளங்க விசைத்தறியாளர்கள், ஆட்டோலூம் மற்றும் நூல் மில் உற்பத்தியாளர்களைக் கொண்டு புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்து ஜவுளித் தொழிலை பாதுகாக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். விசைத்தறி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பினரை உடனடியாக அழைத்துப் பேசி, போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago