கொட்டிவாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் ரூ.418.20 கோடியிலான பாதாள சாக்கடை திட்டம், நீலாங்கரையில்ரூ.77.03 கோடியிலான குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ.418.20 கோடியிலும், நீலாங்கரையில் குடிநீர் வழங்கல் திட்டம் ரூ.77.03 கோடியிலும் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா நீலாங்கரையில் நேற்று நடந்தது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றனர்.திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் நேரு பேசியதாவது: பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ், 17 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு 139.54 கி.மீ. நீளத்துக்கு பிரதான குழாய்கள் பதிக்கப்படும். 24.66 கி.மீ. நீளத்துக்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு, 1,633 இயந்திர நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். இத்திட்டம் மூலம் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை பகுதிகளில் உள்ள 12,776 குடியிருப்புகளுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

இதனால் 1.04 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். நீலாங்கரை பகுதிக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தின்கீழ் 51.651 கி.மீ. நீளத்துக்கு குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்படும். 525 மீட்டர் நீளத்துக்கு உந்துகுழாய்கள் பதிக்கப்பட்டு 22 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியும் அமைக்கப்படும். இத்திட்டம் மூலம் அப்பகுதியில் உள்ள 4,986 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதன்மூலம் 42,206 பேர் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்,சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE