வணிக வளாகங்கள் கட்டி திருவண்ணாமலை கோயிலை சேதப்படுத்துவதாக பாஜக ஆன்மிக பிரிவு குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: வணிக வளாகங்கள் கட்டி திருவண்ணாமலை கோயிலை இந்து சமய அறநிலையத் துறை சேதப் படுத்துவதாக பாஜக ஆன்மிக பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த பணிகளால், கோயிலின் தொன்மை பாதிக்கப்படாது என அமைச்சர் பி.கே.சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.6.40 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த கட்டிட பணிகளால் தொன்மை வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலி யுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து, பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன் கூறும்போது, "இந்திய தொல்லியல் துறையின் விதிகள் படி எந்த ஒரு பழமை வாய்ந்த கோயில்களுக்கு முன்பும் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டி டங்கள் கட்டக்கூடாது என்ற வரைமுறை உள்ளது. அதேபோல், இந்து சமய அற நிலையத்துறை சட்டத்திலும், கோயில் களின் தொன்மையை பாதிக்கும் வகையில் எந்த பணிகளும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

ஒரு கோயிலுக்கு முக்கியமே கோபுரம் தான். அதனை மறைத்து தமிழக அரசு கட்டிடங்களை கட்டுகிறது. குறிப்பாக, கோயில் உண்டியல் பணத்தை இந்து சமய அற நிலையத்துறை தவறாக இது போன்ற பணிகளுக்கு செலவிடு கிறது. அதேபோல், பக்தர்கள் நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்யும் 4-வது பிரகாரத்தில் வாகனங்கள் பழுது நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள், அமைச்சர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

இவை யெல்லாம் கோயிலின் மதிற்சுவரை சேதப் படுத்தும் வகையில் கட்டியிருக் கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகமே கோயிலுக்குள் இருக்கக்கூடாது என சட்டம் கூறுகிறது. அப்படி இருக்க பழுது நீக்கும் மையம், விருந்தினர் இல்லம் இவை எல்லாம் எப்படி கோயிலுக்குள் அனுமதிக்க முடியும். இந்து சமய அறநிலையத் துறை 100 சதவீத விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் உண்டியல் பணத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான்" என்றார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கேட்ட போது, "திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனை ஒழுங்குப்படுத்துவதற்கு சில நடவடிக்கைகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான வணிக கட்டிடத்தை கடைக்காரர்கள் சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். அதனால், கடைக்காரர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்றி இருக்கிறோம். மேலும், அந்த கடைகளை இடித்து, கூடுதலான மாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கடைகள் கட்டுவதற்கு புதிதாக இடங்கள் தேர்வு செய்யவில்லை.

ஏற்கெனவே, கடைகள் இருந்த இடத்தில் தான் இந்த கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் கடைகள் கோபுரத்தை விட உயரம் குறைவு தான். வரைவு திட்டப் பணிகளில் இந்த பணிகளும் ஒரு அங்கமாக உள்ளது. வேறு எந்தவித உள்நோக்கமும் இந்து சமய அறநிலை துறைக்கு கிடை யாது. குறிப்பாக, இந்த பணிகளால் கோயிலின் தொன்மைக்கு எந்தவித பாதிப்பும் வராது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE