புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - ஆளுநர், முதல்வர் அஞ்சலி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் உடலுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

புதுவை அரசியலில் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர் ப.கண்ணன். பேரவைத்தலைவர், அமைச்சர், மாநிலங்களவை எம்பி என அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடந்த 1ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். மறைந்த ப.கண்ணனுக்கு வயது 74.

இதையடுத்து இன்று காலை முதல் ப.கண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரின் உடலுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய்சரவணக்குமார், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, பாஜக மாநிலத் தலைவர் எம்பி செல்வகணபதி, அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் மற்றும் எம்எல்ஏக்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் இருந்து வந்த தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் உடல் தகனம்: புதுவை அரசில் பேரவைத் தலைவர், அமைச்சர், ராஜ்யசபா எம்பி உள்ளிட்ட பதவிகளை வகித்த ப.கண்ணனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய புதுச்சேரி அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், 3 நாள் அரசு துக்கமும் அனுசரிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "புதுவை முன்னாள் பேரவைத் தலைவரும், அமைச்சரும், எம்பியுமான ப.கண்ணன் மறைவையொட்டி நவ 6 முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும்.

புதுவை மாநிலம் முழுவதும் இந்த 3 நாட்களும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும். மேலும் இந்த 3 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். அவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்" என்று தெரிவித்திருந்தார். அதன்படி, அவரது உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டது. கண்ணன் உடல் அவரது இல்லத்தில் இருந்து இன்று மாலை ஊர்வலமாக கருவடிக்குப்பத்தில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE