வறண்டே கிடந்த வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: வியந்து பார்க்கும் பொதுமக்கள்

By என்.கணேஷ்ராஜ்

தேனி: முற்றிலும் மழைநீரையே சார்ந்துள்ள வைகையின் துணை ஆறுகள் ஆண்டின் பல மாதங்கள் வறண்டே கிடக்கும். தற்போது பெய்து வரும் தொடர்மழையினால் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளை கடந்து செல்லும் இந்த நீரோட்டத்தை பலரும் ஆர்வமுடன் வியந்து பார்த்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் வருசநாடு, அரசரடி மேற்குத் தொடர்ச்சி மலையில் மூலவைகை உற்பத்தியாகிறது. ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இந்த நீர் தேக்கப்பட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. வைகையின் நீரோட்டத்துக்கு பக்கபலமாக இதன் துணை ஆறுகள் அமைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள சுருளியாறு, கொட்டக்குடி, வரட்டாறு, வராகநதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட சிற்றாறுகள் மலைத் தொடர்களில் பெருக்கெடுத்து வரும் நீரை வைகைஆற்றுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன.

பெரியகுளம் வராகநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

இருப்பினும் இந்த ஆறுகள் மழைச்சரிவு நீரோட்டங்களையே முழுமையாக சார்ந்துள்ளன. இதனால் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே இதில் நீர்வரத்து இருக்கும். ஆண்டின் பெரும்பான்மையான மாதங்களில் வறண்டே கிடக்கும். கடந்த இரண்டு வாரங்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த துணை ஆறுகளில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் வராகநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

குறிப்பாக கொட்டக்குடி, வராகநதி, சுருளியாறு, வரட்டாறு, மஞ்சளாறு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நீர்ப்பெருக்கு வைகைஆற்றுக்கு வளம் சேர்ப்பதாக உள்ளது. கழிவுநீர் செல்லும் பாதை போல இருந்த இந்த ஆறுகளில் தற்போது வெள்ளநீர் செல்வதால் பலரும் ஆர்வமுடன் இதனை ரசித்து வருகின்றனர். மழைக்கான சூழல் தொடர்வதால் இதில் தொடர் நீரோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, கரையோரம் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி நீர்வளத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE