அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? - தமிழக பாஜக கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: “உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை மதித்து அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி, அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆளும் கட்சியைச் சார்ந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது உயர் நீதிமன்றம்.

இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என யாரும் எந்த கூட்டத்தையும் கூட்டுவதற்கு உரிமையில்லை. இத்தகைய பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானது என்பதை ஆட்சியாளர்கள் உணருவதோடு, பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்று மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் போக்கினை ஏற்படுத்துவதை விடுத்து, உடல்நலத்துக்கு தீங்கினை ஏற்படுத்தும் மது மற்றும் போதை பொருட்களை அழிப்பது, ஊழலை ஒழிப்பது, தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூக சீர்கேடுகளை ஒழிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவது சிறந்தது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதித்து நடந்து கொள்வாரா? திமுக அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா?

இனி, சனாதன தர்மம் அதாவது இந்து மதம் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிடுவாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி, அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE