வருமான வரி, அமலாக்க துறைகள்தான் பாஜகவின் கூட்டணி கட்சிகள்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசியல் பழிவாங்கலுக்கான பாஜகவின் கூட்டணிகட்சிகள்தான் வருமான வரித் துறையும், அமலாக்கத்துறையும். இவற்றின் சலசலப்பு, அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது என்று சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மண்டல திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடந்தது. இதில், சென்னை தெற்கு மற்றும் கிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் வாக்குச் சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், காணொலி வாயிலாக பங்கேற்றார். ஸ்டாலின் கூறியபடி, அவரது உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். முதல்வர் உரையில் கூறியிருந்ததாவது:

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் வாக்காளர்களுக்கும், மக்களவை தேர்தல் வெற்றிக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்தான் முழு பொறுப்பு. உங்களை நம்பித்தான் ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என்று கம்பீரமாக முழங்குகிறோம். அதே கம்பீரத்தோடு இன்று முதல் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால், திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இண்டியா கூட்டணி வெற்றிக்காக, திமுக அரசின் சாதனைகளை மட்டுமின்றி, பாஜகவின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு எந்த சிறப்பு திட்டத்தையும் கொண்டு வராமல், மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது. பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் சொல்லுங்கள்.

அரசியல் பழிவாங்கலுக்கான பாஜகவின் கூட்டணிகட்சிகள்தான் வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும். ‘ரெய்டு’கள் மூலம் அதிமுகவைமிரட்டி, நீட்டிய இடங்களில் கையெழுத்து வாங்கியதுபோல, திமுகவையும் மிரட்டலாம் என மத்திய பாஜக அரசு பகல் கனவு காண்கிறது. இந்த சலசலப்பு, அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது.

கொள்கை எதுவுமின்றி, ஊழல் மட்டுமே அச்சாணி என்று, ஆட்சியில் இருந்து தமிழகத்தை நாசப்படுத்திய அதிமுகவும், தமிழகத்தின் உரிமைகளை பறித்து மாநில அடையாளத்தை சிதைக்க நினைக்கும் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும், வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் அல்லது மறைமுக கூட்டணியாக வந்தாலும் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் டெபாசிட்கூட கிடைக்க கூடாது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைய இன்று முதல் உழைத்தாக வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சியை பிடித்தாக வேண்டும்.

இவ்வாறு உரையில் முதல்வர் கூறியுள்ளார்.

முன்னதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘பாஜக ஆட்சியில், பிரதமர் மோடியின் நண்பரான அதானியின் குடும்பம் மட்டும்தான் வாழ்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை அதானி நிறுவனத்துக்கு அளித்ததுதான் பாஜகவின் சாதனை’’ என்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு,ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன்,கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி,சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE