கனமழை @ சேலம், ஈரோடு: சாலைகளில் வெள்ளம்; தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம்

By செய்திப்பிரிவு

சேலம் / ஈரோடு / நாமக்கல்: சேலம் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அன்று மாலை முதல் இரவு வரை சேலம் மாநகர பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், ஆத்தூர், ராமநாயக்கன் பாளையம், அய்யங்கரடு, காமராஜ் நகர், கல்பகனூர், கொத்தாம் பாடி, கல்வராயன் மலைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

அதேபோல, நேற்று மதியமும் மாநகரின் பல இடங்களில் மழை பெய்த நிலையில், சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 99 மிமீ மழை பெய்தது. மழை காரணமாக ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. வசிஷ்ட நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

ஏற்காட்டில் மழை: ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை சாரல் மழையுடன் மூடு பனி ஏற்பட்ட நிலையில், சாலைகளில் வாகனங்கள் செல்வதை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மேக கூட்டம் முற்றுகையிட்டு இருந்தது. மழை மற்றும் மூடுபனியால் காப்பி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரூட்டியபடி நகர்ந்து சென்றன. மூடு பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்படைந்தது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): தம்மம்பட்டி- 99, எடப்பாடி-86, சங்ககிரி-67.4, கெங்கவல்லி-50, ஆத்தூர்-45.2, ஏற்காடு-41, சேலம்-40.3, ஆணைமடுவு-36, தலைவாசல்-27, வீரகனூர்-25, கரியகோவில்-22, ஓமலூர்-18.2, காடையாம்பட்டி-15.6, மேட்டூர்-8.2, பெத்தநாயக்கன்பாளையம்-6 மிமீ என மழையளவு பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் தரைப்பாலம் மூழ்கியது: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை சாரலாகத் தொடங்கிய மழை, இரவில் கனமழையாக மாறி, பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஈரோடு நகர் பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையில் வெள்ளம் தேங்கியது. தாளவாடி பகுதியில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பவானி, சத்தியமங்கலம், மொடக் குறிச்சி, குண்டேரிப் பள்ளம், கொடி வேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை தொடர்ந்தது. மழை காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக எலந்தகுட்டை மேடு பகுதியில் 88 மிமீ மழை பதிவானது. கொடிவேரி அணையில் இருந்து 2,000 கன அடிக்கு மேல் உபரிநீர் வெளியேறியதால் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

கோபியை அடுத்த நம்பியூர் - அரசூர் வழியாக சத்தியமங்கலம் செல்லும் சாலையில் தட்டாம்புதூரில் பாலம் கட்டும் பணி நடப்பதால் அங்கு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலம் மழை வெள்ள நீரில் மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் கோபி கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): எலந்தகுட்டைமேடு- 88, பவானி- 72, மொடக்குறிச்சி- 70, குண்டேரிப்பள்ளம்- 68.80, நம்பியூர்- 61, கொடிவேரி- 56, வரட்டுப்பள்ளம்- 55.20, சத்தியமங்கலம்- 53, பெருந்துறை -49, பவானி சாகர்- 47.40, ஈரோடு - 44, கொடுமுடி- 40, அம்மாப்பேட்டை - 36.20, கவுந்தப்பாடி- 34, தாளவாடி - 24.40, சென்னிமலை- 12.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக லேசான தூறலுடன் தொடங்கிய மழை விடிய விடியக் கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதனால், நாமக்கல் நகரின் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: நாமக்கல் 58, எருமப்பட்டி 60, குமாரபாளையம் 85.40, மங்களபுரம் 34.60, மோகனுர் 77, பரமத்தி வேலூர் 60, புதுச்சத்திரம் 14.40, ராசிபுரம் 18, சேந்தமங்கலம் 39, திருச்செங்கோடு 15, கொல்லி மலை ( செம்மேடு ) 27 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE