திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் தொடர் மழை: சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தொடர் மழையால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மிதமான மற்றும் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இந்தஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்துள்ளது.

சுமார் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்இருப்பு, 2,726 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 18.58 அடியாகவும் இருக்கிறது. சென்னைக் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு,1,833 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 30.40 அடியாகவும் உள்ளது. சென்னைக் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் விநாடிக்கு 40 கன அடியும், உபரிநீர் விநாடிக்கு 30 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியின் நீர்இருப்பு 613 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 13.99 அடியாகவும் இருக்கிறது.

500 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 438 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 34.74 அடியாகவும் இருக்கிறது.

அதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,132 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 22.05 அடியாகவும் உள்ளது. இதில், சென்னைக் குடிநீர் மற்றும் சிப்காட் தேவைக்காக விநாடிக்கு 107 கன அடியும், உபரிநீர் விநாடிக்கு 50 கன அடியும் திறக்கப்படுகிறது என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE