புதுச்சேரி தொழிற்சாலை விபத்து குறித்து விசாரணை: துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தொழிற்சாலையில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''புதுவை, காலாப்பட்டு, சொலாரா ஆக்டிவ் பார்மா தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு அதில் தொழிலாளர்கள் சிலர் காயமடைந்து உள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை தருகிறது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஒன்றை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். விபத்திற்கான காரணத்தை கண்டறிய முறையான விசாரணை நடத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE