இண்டேன் தானியங்கி எரிவாயு பதிவு | தமிழ் மொழி சேவையில் தடங்கல் ஏன்? - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவுக்கான தமிழ் மொழி சேவையில் தடங்கல் ஏற்பட்டது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தீர்ந்த உடன், இண்டேன் தானியங்கி எரிவாயு குரல் பதிவு சேவை மூலம் பதிவு செய்து பெற்று வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

எம்.பி., புகார் கடிதம்: இந்நிலையில், சிலிண்டர் பதிவு சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார். இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ், ஆங்கிலத்துக்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யும் மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து நிற்கிறார்கள். சமையல் எரிவாயு வேண்டுமென்றால் இந்தி கற்றுக் கொண்டு வா என்று மக்களை துரத்துவதுபோல உள்ளது. எனவே, மீண்டும் இண்டேன் சமையல் எரிவாயு பதிவு தமிழ் சேவையை தர வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இம்மாதம் 1-ம் தேதி முதல் ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து ஜியோ நிறுவனத்துக்கு எங்களது தானியங்கி சமையல் எரிவாயு குரல் பதிவு சேவை (ஐவிஆர்எஸ்) மாற்றப்பட்டுள்ளது. இதனால், மாநில மொழி தேர்வு வசதியில் சிறு தடங்கல் ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுவிட்டது. எனவே, வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு வசதியை தமிழ் மொழியிலும் தடையின்றி பெறலாம் என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE