நடப்போம் நலம்பெறுவோம் திட்டம் தொடக்கம்: கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் உதயநிதி நடைபயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ‘நடப்போம் நலம்பெறுவோம்’ திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொட்டும் மழையில் தொடங்கி வைத்து, நனைந்தபடியே நடைபயிற்சி மேற்கொண்டார். மற்ற மாவட்டங்களில் காணொலி காட்சி மூலமாக இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக சுகாதாரத் துறையின் 2023-24-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், 'பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள நகராட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதையை கண்டறிந்து, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதைகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் மக்களுடன் இணைந்து மாவட்ட அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைபயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம்கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இத்திட்டத்தை சென்னை, அடையாறு டாக்டர் முத்துலட்சுமி பூங்கா அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை கொட்டும் மழையில் நனைந்தபடி தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார். தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்துமாவட்டங்களிலும் காணொலிக் காட்சி மூலமாக திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காணொலிக் காட்சி மூலமாக கோயம்புத்தூர், மதுரை, திருச்சிமற்றும் தேனி மாவட்ட பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக அனைத்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்களும் நகராட்சி அமைப்புகளுடன் இணைந்து தொடக்கம் மற்றும் முடியும் இடம், பசுமையான நடைபாதை, ஓய்வு, உட்காரும் வசதி, இரு சக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், குப்பையில்லா தூய்மையான நடைபாதை, நிழற்கூடங்கள், வழிகாட்டிகள், குடிநீர் அருந்துமிடம், சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ‘இந்து’ என்.ராம், எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, தாயகம் கவி, அசன்மவுலானா, பிரபாகர் ராஜா, பரந்தாமன், மயிலை த.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் கோவிந்தராவ், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்து துறை இயக்குநர் மருத்துவர் டி.எஸ்.செல்வவிநாயகம், காவல்துறை துணை ஆணையர்(அடையார்) பொன்.கார்த்திக்குமார், சென்னை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், சென்னை மாநகராட்சியின் 178-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ்.பாஸ்கரன் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில், “நீரிழிவு நோயும், ரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது. இதற்கு ஆரம்பகட்ட தீர்வாக மருத்துவ உலகம் முன்வைப்பது முறையான நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் தான்.எனவே, அனைத்து மாவட்டங்களிலும் நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ.சுகாதார நடைபாதை திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடப்போம் நலம் பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE