பட்டாசு விற்பனைக்கு உரிமம் வழங்காமல் இழுத்தடிப்பு: அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், பட்டாசுகடைகள் வைக்க விரும்புவோருக்கு, இன்னும் விற்பனைக்கான உரிமம் வழங்காமல் திமுக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

பட்டாசுக் கடைகள் வைக்கஇணைய வழியாக விண்ணப்பித்தவர்களிடம் ரூ.600 கட்டணம் வசூலித்துவிட்டு, உரிமம் வழங்காமல் தமிழகம் முழுவதும் சுமார் 7,000 சிறு வியாபாரிகளை திமுகஅரசு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

உரிமம் கிடைக்காததால், ஆலைகளில் இருந்து பட்டாசுகளைக் கொள்முதல் செய்ய முடியாமல் வணிகர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மட்டும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் ஆலைகளில் முடங்கிக் கிடக்கின்றன.

பட்டாசு விற்பனை உரிமம்பெற காலதாமதம் ஏற்படுவது,பெரும் விற்பனையாளர்களுக்கு மட்டும் பலன் தரும். மேலும், பொதுமக்கள் கடும் விலை உயர்வை எதிர்கொள்ள நேரிடும். இதன்மூலம், திமுகவினர் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் பட்டாசு விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்களோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது. முந்தைய ஆண்டுகளில், காவல், தீயணைப்பு, உள்ளாட்சித் துறைகளில் அனுமதிக் கடிதம் பெற்றாலே உரிமம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு கூடுதலாக தாசில்தார், தனிநபர் ஒருவர் என மொத்தம் 5 அனுமதிக் கடிதங்களை வியாபாரிகள் பெற வேண்டும் எனத் திமுக அரசு கூறியிருக்கிறது. இதில் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, உரிமம் வழங்குவதை தட்டிக் கழிக்கிறது.

உரிமம் வழங்க தேவையின்றிக் காலம் தாழ்த்துவது முறைகேட்டுக்கே வழிவகுக்கும். மேலும், அரசின் இந்த அலட்சியப் போக்கு,மக்களின் தீபாவளி கொண்டாட்டத்தையும் பாதிக்கும்.

எனவே, பண்டிகை கொண்டாட்டங்கள் மக்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து வியாபாரிகள் அனைவருக்கும் உரிமம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை போராட்டத்துக்கு தூண்ட வேண்டாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE