‘புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஊழல் செய்கிறார்’ - காங். செயல் வீரர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மதகடிப்பட்டில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ஒதுக்கப்பட நிதி மோடி ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விவசாயிகளுக்கு இரட்டிப்பு மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் தற்போது உரத்துக்கான மானியத்தை நிறுத்தி விட்டார்கள்.

ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவது குறித்து மோடிக்கு கவலை இல்லை. ஆனால் அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு வங்கிகள் மூலம் அதிக கடன் கொடுத்து விமான நிலையம், துறைமுகம், மின்சார உற்பத்தி நிலையங்களை வாரி கொடுத்துள்ளார். மோடியுடன் அதானி வெளி நாடுகளுக்கு சென்று, மோடியின் சிபாரிசு காரணமாக பல்வேறு நாடுகளில் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதற்கான ஆதாரத்தை காண்பித்தாலும் மோடிவாய் திறப்பதில்லை. இதிலிருந்து பாஜக ஊழல் நிறைந்த கட்சி என தெளிவாக தெரிகிறது. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மோடி ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் 2024-ல் மீண்டும் பிரதமராகலாம் என வேலை பார்த்து வருகிறார்.

ஆனால் மக்கள் மோடிக்கு எதிர்ப்பாக உள்ளனர். மக்கள் மோடியை வீட்டுக்கு அனுப்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரங்கசாமி பாஜவுக்கு அடிமையாகி விட்டார். அவர் என்ன தொழில் செய்கிறார்? எப்படி மேட்டுப்பாளையம் சாலையில் ரூ. 5 கோடியில் திருமண மண்டபம் கட்டுகிறார்? இதெல்லாம் லஞ்சம்,

ஊழல் பணம். நம்மிடம் இருந்து சென்ற பொதுப்பணித் துறை அமைச்சர் ரூ.2 கோடியில் தனது வீட்டை புதுப்பித்துள்ளார். அந்த பணமும் லஞ்ச பணம் தான். இன்னொரு அமைச்சர், பணத்தை இங்கே வைத்தால் பிடித்துக்கொள்வார்கள் என வெளிநாட்டில் பதுக்குகிறார். இன்னொரு அமைச்சர் ரூ.20 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு, தரமில்லாத தீவனத்தை மக்களுக்கு வழங்கி ஊழல் செய்கிறார். மற்றொருவர் சூப்பர் முதல்வர் சபாநாயகர். இவர் தனியாக ஒரு ஆட்சி நடத்துகிறார்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் யாருக்கும் அக்கறை இல்லை. யார், யாரைஎல்லாம் நாம் உருவாக்கினோமோ அவர்கள் இறுதியில் நம்மை முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள்தான். அதில் ரங்கசாமி முதலானவர், இரண்டாவது நமச்சிவாயம், மூன்றாவது அங்காளன். முதல்வர் ரங்கசாமி மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி கேட்க மாட்டார்.

வீடு தேடி வந்து ஒன்றிய அரசு தர வேண்டும். ஒரு பக்கம் ரெஸ்டோ பார், மறுபக்கம் கஞ்சா என எல்லோரும் மயக்கத்திலே இருக்க வேண்டும். அப்போது தான் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும். என்றார்.

மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேசுகையில், “சென்டாக்கில் ஊழல், தவறு நடந்து விட்டது என்று பாஜக ஆளுநரே கூறுகிறார். அப்படியானால் ஆளுநர் தான் ஊழல், தவறு செய்கிறார். இலவச திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் ரங்கசாமி ஆட்சியில் கிடைப்பதில்லை. ஏழை மக்களுக்கு உறுதுணையாக இருப்பவர் ராகுல் காந்தி தான். எனவே அவரது கையை நாம் ஒருங்கிணைந்து வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE