தமிழகம், புதுச்சேரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்றும் (நவ.4), நாளையும் (நவ.5) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளாவில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவில் அதிகபட்சமாக கோவை மேட்டுபாளையத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வரும் ஞாயிறு வரை இந்த நிலை தொடரலாம் என்றும், குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவின் சில மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிறு அன்று ஆலப்புழா, கோட்டயம், திரிசூர், மலப்புரம், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நாளை 10 மாவட்டங்களில் கனமழை: இதற்கிடையில், நாளை (05.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தார், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 07.11.2023 மற்றும் 08.11.2023: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் கிலோ மீட்டர் வேகத்திலும் 45 இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE