20 ஆண்டுகளில் டாஸ்மாக் வருவாய் ரூ.44,000 கோடியாக உயர்வு: தீபாவளி போனஸ் மட்டும் உயரவில்லை என ஊழியர்கள் வேதனை

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் 5,329 சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தமிழகம் முழுவதும் 24 ஆயிரம் பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.

2003-2004-ம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.3,639 கோடி என்று இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த வருவாய் தற்போது ரூ.44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுடைய ஊதியம் உயரவில்லை. தற்போது வரை அவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் பணிபுரிகிறார்கள்.

தொடக்கத்தில் 26 ஆயிரம் பேர் வரை பணிபுரிந்துள்ளனர். தற்போது அவர்களில் பலர் மரணமடைந்தும், பணி ஓய்வும் பெற்றுள்ளனர். ஆனால், அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறியதாவது: 12 மணி நேரம் பணிபுரிகிறோம். வார விடுமுறை கிடையாது. ஆனால், மற்ற அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிபவர்களைப் போல் எங்களுக்கு ஊதியமும், போனசும் வழங்கப்படுவதில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் என்பது வாரச் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்தது. மாதத்துக்கு நான்கு வாரங்கள் அப்படி கணக்கிட்டால் மாதத்துக்கு 28 நாள் சம்பளம்தான் பெற முடிந்தது. ஆண்டுக்கு 52 வாரம் என்ற அடிப்படையில் மறைமுகமாக ஊழியர்களுக்கு மாதத்தில் 2 நாள் சம்பளம் மறுக்கப்பட்டு வந்தது அல்லது கொடுக்கப்படாத ஊதியமாக கருதப்பட்டது.

1935 முதல் நாடு முழுவதும் பண்டிகைகள் கொண்டாட்டத்தையொட்டி தீபாவளி, ஓணம் போன்ற பண்டிகைகளுக்கு மாதந்தோறும் கொடுக்கப்படாத அந்த 2 நாள் ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதன் பிறகு போனஸ் சட்டம் கொண்டு வரப்பட்டு தொழிற்சாலைகளில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு அந்தச் சட்டப்படி லாபத்தில் பங்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த போனஸ், லாபத்துக்குத் தகுந்தவாறு, துறைகளுக்கு தகுந்தவாறு மாறுபடும்.

டாஸ்மாக் பணியாளர்களைப் பொருத்தவரை கரோனா ஆண்டு வரை அதாவது 2018-19 வரை 20 சதவீதம் போனஸ் பெற்று வந்தோம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி ஆண்டும் தற்போது திமுக ஆட்சியிலும் 2022 வரை 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டது.

கரோனா மற்றும் நிதி நிலைமையைக் காரணம் காட்டி டாஸ்மாக் பணியாளர்களுக்கு இப்படி போனஸ் குறைக்கப்பட்டது. தற்போது லாபம் ஈட்டக்கூடிய பொதுத் துறைகளுக்கு 20 சதவீதம் போனஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் டாஸ்மாக் குறிப்பிடப்படவில்லை.

டாஸ்மாக் நிறுவனத்தின் லாபத்தை மறைத்து நஷ்டக்கணக்கு காட்டி எங்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே 10 சதவீதம் போனஸ் வழங்க வாய்ப்புள்ளது. தமிழக அரசின் மற்ற பொதுத்துறை நிறுவனங்களைப்போல் டாஸ்மாக் துறையும் லாபத்தில்தான் இயங்குகிறது.

எனவே, எங்களுக்கு 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி நெருங்குகிற வேளையில், இன்னும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE