தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 14 லட்சம் வழக்குகள் நிலுவை வழக்குகளாக இருந்து வருவதால், இந்த வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க நீதிமன்றங்களில் விடுமுறை நாட்களிலும் பிரத்யேக அமர்வுகளை அமைக்க உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 14 லட்சத்து 63 ஆயிரத்து 569 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதுவே, 2015-ல் உயர் நீதிமன்றத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 428, கீழமை நீதிமன்றங்களில் 11 லட்சத்து 7 ஆயிரத்து 766 என மொத்தம் 13 லட்சத்து 92 ஆயிரத்து 194 வழக்குகளாக நிலுவை குறைந்தது. ஆனால், 2016-ல் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 615 வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 10 லட்சத்து 99 ஆயிரத்து 521 வழக்குகள் என நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 13 லட்சத்து 97 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 13.70 லட்சத்தை தொட்டுள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகும். ஒவ் வொரு ஆண்டும் சுமார் 14 லட்சம் வழக்குகள் தமிழகத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் சேர்த்து அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இதில் கடந்த 2015-ல் 37 நீதிபதிகளும், 2016-ல் 57 நீதிபதிகளும் பணியில் இருந்தனர். 2017 முடிவில் தற்போது பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ஐ தொட்டுள்ளது. தற்போது மேலும் 9 நீதிபதிகளை நியமிப்பதற்கான ஆணை விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால், வழக்குகளின் தேக்கம் விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீதித்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் 2016-ம் ஆண்டைவிட 2017-ல் நிலுவை வழக்குகளுக்கும், இறுதி விசாரணை வழக்குகளுக்கும் அதிமுக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நீதிபதிகளின் செயல் திறனும் கடந்த 2017-ல் அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை நாட்களிலும்கூட உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணியாற்றி வழக்குகளின் நிலுவையைக் குறைத்து வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலுவை வழக்குகளை விசாரிப்பதற்கென்றே உயர் நீதிமன்றத்தில் வரும் ஜன.6-ம் தேதி பிரத்யேக அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல கீழமை நீதிமன்றங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வழக்குகள் நிலுவையாக இருந்து வருகின்றன. அந்த தேக்கத்தைக் குறைக்க, கீழமை நீதிமன்றங்களில் விடுமுறை நாட்களிலும் பிரத்யேக அமர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவிர, நீதித்துறை அதிகாரிகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 1,56,840 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 1,55,453 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள கோவையில் 82,602 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 81,271 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் விழுப்புரம் உள்ளது. அங்கு 48,505 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் இருந்த வழக்குகளையும் சேர்த்து 49,119 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மதுரை, ஈரோடு மாவட்டங்கள் 4, 5-வது இடங்களைப் பெற்றுள்ளன. மதுரையில் 39,545 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு முந்தைய நிலுவை வழக்குகளையும் சேர்த்து 44,787 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஈரோட்டில் 41,029 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 41,534 வழக்குகள் தீர்வு காணப் பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago