அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 7 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் வருமான வரித் துறை சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் 7 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித் துறை சோதனை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரித் துறை சோதனை: தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை: அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைகளை கவனித்து வருகிறார். இதனால், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருகிறார். அதனால், அது சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

3 நிறுவனங்களை மையப்படுத்தி சோதனை: காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் மற்றும் அருணை கல்வி நிறுவனங்கள் ஆகிய 3 நிறுவனங்களை மையப்படுத்தி வருமான வரித் துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர். காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டும் நிறுவனங்களாகும். எனவே, இந்நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி வருமானம் எவ்வளவு ஈட்டப்பட்டுள்ளது? அந்த வருமானங்களுக்கு முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா? வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற கோணங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை: இந்த சோதனையானது சென்னை, திருவண்ணாமலை செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: இன்று காலை துவங்கி, 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சோதனை நாளை வரை தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாவும் வருமான வரி சோதனை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது வருமான வரித் துறை. இதில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “பாஜகவின் ஒரு அணிதான் வருமான வரித் துறை” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE