மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட படகை மீட்க மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, மாலத்தீவு அரசுடன் பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களின் படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் செலுத்தியே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதை மத்திய, மாநில அரசுகளே செலுத்தி தருவைக்குளம் மீனவர்களின் படகை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு அரசால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதி மீனவர்கள் 12 பேரும் மத்திய அரசின் உதவியால் மீட்கப்பட்டிருக்கும் போதிலும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகு இன்னும் மீட்கப்படவில்லை. மீனவர்களின் ஒற்றைப் படகை விடுவிக்க ரூ.2.27 கோடி அபராதம் கட்ட வேண்டும் என்று மாலத்தீவு அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது. ரூ.2.27 கோடி அபராதம் கட்ட இயலாது என்பதால், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க முடியாமல் தருவைக்குளம் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் திட்டமிட்டு மாலத்தீவு கடல் எல்லைக்குள் ஊடுருவவில்லை. மாறாக, மோசமான வானிலை காரணமாகவே அவர்களின் படகு மாலத்தீவு கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டது. தாங்கள் எல்லை தாண்டி சென்று விட்டதை உணர்ந்த மீனவர்கள், அங்கிருந்து புறப்பட முயன்றபோது தான் மாலத்தீவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை, குற்றவாளிகளைப் போல கருதி அவர்களின் படகை மாலத்தீவு அரசு பறிமுதல் செய்திருக்கக் கூடாது.

மத்திய, மாநில அரசுகள் இந்த சிக்கலில் தலையிட்டு, மாலத்தீவு அரசுடன் பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களின் படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் செலுத்தியே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதை மத்திய, மாநில அரசுகளே செலுத்தி தருவைக்குளம் மீனவர்களின் படகை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மாலத்தீவில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகுக்கு இந்திய மதிப்பில் ரூ.2.27 கோடி அபராதம் விதித்து மாலத்தீவு மீன்பிடி, கடல் வளங்கள் மற்றும் விவசாய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் பரிதவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE