தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித் துறை சோதனை அரசியல் நாடகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி: "தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தாா். அப்போது அவரிடம், தொடர்ந்து தமிழக அமைச்சர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படுகிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர்,"இந்த வருமான வரித்துறை சோதனைகளை பொதுமக்களே எப்படி பார்க்கின்றனர், என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைக்கு தமிழக அரசு நிறைவேற்றியுள்ள 28 மசோதாக்கள் ஆளுநரிடம் காத்திருக்கின்றன. அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு வழி இல்லை. தமிழக அரசும், கேரள அரசும் இன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

மக்கள் பணியை செய்யவிடாத ஒரு மத்திய அரசு, மக்கள் பணி செய்வதற்கு இதுபோன்ற தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது ஓர் அரசியல் நாடகம் என்பது அனைவருக்குமே தெரியும். முதலில் மத்திய அரசு அவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கக்கூடிய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது. அவர்களுக்கு இந்த சோதனை பொருந்துமா? அவர்களுக்கு ஏன் இது பொருந்தவில்லை? இதுகுறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

முன்னதாக, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் திருவண்ணாமலை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE